Sunday, December 16, 2018

How Lanka

லாதம் 7வது சதம் - இலங்கையின் பந்துவீச்சுக்கு தண்ணி காட்டிய நியூசிலாந்து

வெலிங்டனில் நடந்து வரும் முதல் டெஸ்டில், இலங்கையின் பந்துவீச்சை சமாளித்து நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கை அணி நேற்றைய ஸ்கோர் 275வுடன் 2வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. சௌதியின் ஓவரில் இலங்கையின் லஹிரு குமர அவுட் ஆக, அந்த அணி 282 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையையும் இழந்தது.

நிரோஷன் டிக்வெல்ல 80 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி 6 விக்கெட்டுகளையும், வாக்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 59 ஆக உயர்ந்தபோது, ஜீத் ராவல் 43 ஓட்டங்களில் லஹிரு குமார பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடினார். வில்லியம்சன்-லாதம் ஜோடி இலங்கை பந்துவீச்சுக்கு பெரும் சவால் விடுத்தது. துரிதமாக இந்த ஜோடி ஓட்டங்களை குவித்ததன் மூலம் நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களை கடந்தது.

ஒரு வழியாக இந்த ஜோடியை தனஞ்ஜெய டி சில்வா பிரித்தார். 93 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் எடுத்திருந்த வில்லியம்சன், சில்வாவின் பந்துவீச்சில் ரஜிதாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் களம் கண்ட அனுபவ வீரர் ராஸ் டெய்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் டாம் லாதம் தனது 7வது சதத்தை கடந்தார். நியூசிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 84 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் எடுத்துள்ளது.



டாம் லாதம் 121 ஓட்டங்களுடனும், ராஸ் டெய்லர் 50 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லஹிரு குமார, சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.