Monday, July 3, 2017

How Lanka

பொலிஸ்துறையில் 16 ஆயிரம் வெற்றிடங்கள்!

இலங்கை பொலிஸ்துறையில் பல்வேறு பிரிவுகளிலும் சுமார் 16 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாக நாடாளுமன்றத்தின் அரச கணக்கு சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்துறையின் மொத்த ஆட்பலத்தில் இது 16 சதவிகிதமாகும். அத்துடன், பொலிஸ்துறையின் உள்ளக கணக்காய்வுப் பிரிவில் 64 வீத வெற்றிடங்கள் நிலவுகின்றன. இந்தப் பற்றாக்குறை பொலிஸ்துறையின் வழமையான பணிகளுக்கு இடைஞ்சலாக இருக்குமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமார் 3,700 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களைத் தவிர்ந்த வேறு இடங்களில் பணிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பொலிஸ் நிலையங்களில் வழமையான பணிகளில் இடையூறு ஏற்படுவதாக பொலிஸ்மா அதிபர் நாடாளுமன்ற கணக்குக் குழுவுக்கு அறிவித்திருக்கிறார்.

நீண்டகாலமாக பொலிஸ்துறைக்குப் புதியவர்களை சேர்த்தல், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை சரியாக நடைபெறவில்லை. அத்துடன், அத்துறையில் உள்ளவர்களுக்கான சம்பளங்கள் மற்றும் இதரக் கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ இருப்பிடங்கள் போன்றவற்றிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.