நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியில் ஈடுபடும் பண்ணையாளர்கள் தமது உற்பத்தியை விற்பனை செய்ய முடியாமல் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் பாற் பண்ணையாளர்கள் தமது உற்பத்தியை விற்பனை செய்ய முடியாமல் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் நாம் நேற்று (04) செய்தி வெளியிட்டிருநதோம்.
இன்றும் நாம் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருந்தோம்.
மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கால் நடைகள் மூலம் பெற்றுக் கொள்ளும் பாலை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிடத்த அளவு பாலை மாத்திரமே, கால்நடை வளர்ப்பாளர்கள் கூட்டுறவு சங்கம், கொள்வனவு செய்வதாகவும், தனியார் நிறுவனங்கள் தற்போது பாலை கொள்வனவு செய்வது இல்லையெனவும் இவர்கள் குறிப்பிட்டனர்.
பால் பண்ணையாளர்களை ஊக்குவிப்பதாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறும் போது வாக்குறுதிகளை வழங்கினாலும், இவ்வாறான பால் மாபியாவினால் இன்று பண்ணையாளர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பிற்கு 400 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை அதே விலையில் பேணவுள்ளதாகவு அரசாங்கம் இதன்போது குறிப்பிட்டது.
400 கிராம் பால் மா பொதியொன்றின் விலையை குறைக்காமல் இருப்பதற்கு உள்நாட்டு பாற் பண்ணையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று காரணம் காட்டிய அரசாங்கம் பசும்பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்காமை கவலைக்குரியதே.