இத்தகைய சம்பவங்கள் தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கடந்த 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் அனர்த்தம் காரணமாக சொத்துக்களை இழந்தவர்கள் இழப்பீடு கோரி புனர்வாழ்வு அமைச்சுக்கு விண் ணப்பித்து 15 வருடங்களாகின்றன.
எனினும் இதுவரை பிரதேசத்தைச் சேர்ந்த பலருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவு கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இதுவரை கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு அலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தும் சில விஷமிகள் தாம், ‘‘கொழும்பு புனர்வாழ்வு அதிகார சபையிலிருந்து கதைக்கின்றோம்.
தங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. மேலதிக விவரங்களை வேறொரு அலுவலருடன் கதையுங்கள்’ எனக் கூறி மற்றொரு அலைபேசி இலக்கத்தை வழங்குகின்றனர்.
மக்கள் அந்த இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு கதைத்துள்ளனர். அதன்போது, ‘‘இழப்பீட்டுக்கான காசோலை தயாராக உள்ளது.
விரைவில் அனுப்புவதாயின் குறித்த இலக்கத்துக்கு 19 ஆயிரத்து 500 ரூபா ஈசி காஷ் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
பணம் கிடைத்ததும் தங்களது இழப்பீட்டுக் கொடுப்பனவு தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்’ என குறித்த இலக்கமுடைய நபர் கூறியுள்ளார்.
அதன் பிரகாரம் காசு அனுப்பப்பட்டுள்ளது. அனுப்பி ஒரு வாரத்துக்கு மேலாகியும் இழப்பீட்டுக் கொடுப்பனவு கிடைக்காததால் மீண்டும் குறித்த நபருடன் தொடர்பு கொண்டபோது அலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் இடரின் போது பிரதேசத்தைச் சேர்ந்த அரச பணியாளர்கள், ஓய்வூதியர்கள், வணிகர்கள், வெளிநாட்டில் வதிவோரின் குடும்பங்கள், வாகனங்கள் வைத்திருந்தோர் என ‘உ’ பங்கீட்டு வைத்திருந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் போர் அனர்த்தத்தில் ஏற்பட்ட சொத்தழிவுக்கு இழப்பீடு கோரி பிரதேச செயலகம் ஊடாக புனர்வாழ்வு அமைச்சுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்தவர் களுக்கு அமைச்சால் இலக்கம் வழங்கப்பட்டு தொடர் இலக்கம் மூலம் இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் கிளிநொச்சியில் வைத்து அப்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இழப்பீடு வழங்காதவர்களின் பெயர் விவரங் களை அறிந்துள்ள சிலரே மக்களை இவ்வாறு ஏமாற்றிப் பணம் பறித்து வரு கின்றனர் என விசனம் தெரிவிக்கப்பட்டது.