இலங்கையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்த வட்ஸ்அப் தற்போது வழமை போன்று செயற்பாட்டுக்கு வந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, வட்ஸ்அப் மீதான தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர், தடைகளை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமது செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களை முறைகேடாப பயன்படுத்தி தேசிய ஒற்றுமைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் இனவாதத்தையும். மோதல்களையும் உருவாக்கும் முயற்சிகளை தடுக்கும் நோக்கில் சில சமூக வலத்தளங்களுக்கு நுழையும் வசதி தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டது.
சமூக வலத்தளங்களை முறைகேடாக பயன்படுத்தி இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பேஸ்புக் மீதான தடையை நீக்குவது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும்.
இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து, பேஸ்புக் வழமை போன்று செயற்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.