Monday, April 23, 2018

How Lanka

4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது பஞ்சாப்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 22-வது லீக் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.


நாணய சுழற்சியில் வென்ற கவுதம் கம்பீர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி, பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

பஞ்சாப் அணியில் வியக்கத்தக்க வகையில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டு இருந்தார்.

துவக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும் கே.எல். ராகுலும் களம் இறங்கினர். இந்த ஜோடி, பஞ்சாப் அணியின் வழக்கான அதிரடியை வெளிக்காட்ட தடுமாறியது.

பிஞ்ச்(2), கே.எல்.ராகுல் (21), மயங்க் அகர்வால் (21), என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கருண் நாயர் (34) கணிசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


யுவராஜ்சிங் (14) ஏமாற்றம் அளித்தார். டேவிட் மில்லர் 26 ஓட்டங்களில் வெளியேறினார். அணித்தலைவர் அஷ்வின் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் சேர்த்தது.

இதையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, கவுதம் காம்பிர் ஆகியோர் களமிறங்கினர்.

பிரித்வி ஷா 10 பந்ந்தில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்(12), காம்பிர்(4), ரிஷாப் பந்த்(4) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அப்போது டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் - டேனியல் கிறிஸ்டேன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். கிறிஸ்டேன் 6 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

இறுதியில் ராகுல் தெவாட்டியா, ஷ்ரேயாஸ் அய்யர் உடன் இணைந்து அணியின் வெற்றிக்காக போராடினார். தெவாட்டியா 24 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

பஞ்சாப் அணி பந்துவீச்சில் பரிந்தர் ஸ்ரன், அன்கித் ராஜ்புட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.