Thursday, May 17, 2018

How Lanka

நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய உற்சவ காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றாக தடை

நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவில் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 2018.06.14 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாக உள்ளதால் உற்சவ காலங்களில் ஆலய சூழல் மற்றும் வெளியில் தனியார் காணிகள் என்பவற்றில் வியாபார நிலையங்களை நடாத்துவோர வேலணைப் பிரதேச சபையின் முறையான முன் அனுமதியினை உரிய கட்டண அறவீடுகளைச் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -
நயினாதீவு ஆலய உற்சவகாலத்தில் ஆலய சூழலில் நடமாடும் வியாபாரம் செய்வோர் மற்றும் ஐஸ்கிறீம் (வான்) விற்பனை, கடலை, கச்சான் விற்பனை, இனிப்புப் பண்ட விற்பனை முதலான சகல விற்பனை நடவடிக்கைகளுக்கும் தண்ணீர் பந்தல் அமைப்போர், குடிநீர் விநியோகம் செய்வோர் போன்றவர்களும் உரிய அனுமதியினைப் பெற்றே தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

குறித்த உற்சவ காலங்களில் மதுபான, சிகரட், கஞ்சா, வெற்றிலை, பாக்கு, பொலித்தீன் பாவனை முதலானவை ஆலய சூழலிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆலய உற்சவ காலங்களில் குறித்தொதுக்கப்பட்ட சகல வியாபார நடவடிக்கைகளிற்கும் உரிய முறையான முன் அனுமதியினை வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
அனுமதியற்ற வியாபாரங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் நடைபெறுவது தொடர்பில் வேலணை பிரதேச சபையினால் நடவடிக்கை தொடரப்படும் என்பதனையும் கவனத்தில் கொண்டு சபையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை நல்குமாறு வேலணை பிரதேச சபை அன்பாக கேட்டுக்கொள்கின்றது. - வேலணை பிரதேச சபை தவிசாளர்!