வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் சமூக மேம்பாடு தொடர்பான களவிஜயமாக வலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்திற்கு நேரடி விஜயமொன்றை கடந்த வாரம் மேற்கொண்டார். இக் களவிஜயத்தின் போது இப் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக இப் பிரதேச மக்கள் பொதுநலன் கருதிய பல அத்தியவசியமான அபிவிருத்திகளை தமக்கு நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக சுழிபுரம் காட்டப்புலம் வீதி செப்பனிடுவதன் அவசியத்தை அப் பிரதேச மக்கள் தமது முக்கியமான கோரிக்கையாக முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த வருட வீதி அபிவிருத்தி தொடர்பான I project திட்டத்தில் இவ்வீதி திருத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுமென உறுதிமொழி அளித்தார்.
மற்றும் இக் கிராமத்திற்கென சிறுவர் பாடசாலை மற்றும் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இடமொதுக்குவதன் அவசியத்தையும் இப் பிரதேச வாழ் மக்கள் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் இவ்விரு கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி இப்பிரச்சினை சீர்செய்யப்படுமென தெரிவித்தார்.
காட்டுப்புலம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பிரதேசசபை உறுப்பினர் மற்றும் பிரதேச வாழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.